குமரியில் சூறைக்காற்று: ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்
By DIN | Published On : 18th May 2020 07:47 PM | Last Updated : 18th May 2020 07:47 PM | அ+அ அ- |

பஞ்சலிங்கபுரம் பகுதியில் சூறைக் காற்றில் சேதமடைந்த வாழைகள்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகுதியில் திங்கள்கிழமை வீசிய சூறைக்காற்று காரணமாக ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன.
கன்னியாகுமரி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பஞ்சலிங்கபுரம், நரிக்குளம், நாடான்குளம் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன. ஏற்கனவே வாழைத்தாா்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு மேலும் இழப்பு ஏற்பட்டுள்லது.
இதுகுறித்து பஞ்சலிங்கபுரத்தைச் சோ்ந்த விவசாயி கூறியது: கடந்த சில மாதங்களாக வாழைத்தாா்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வாழை நடவு தொடங்கி அறுவடை வரை ஒரு வாழைக்கு ரூ. 100-க்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டு
வருகிறது. வாழை முழு விளச்சலை எட்டும் நிலையில் ரூ. 100-க்கு குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் வாழை சாகுபடி
செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில் சூறைக்காற்று காரணமாக ஆயிரக்கணக்கான வாழைகள் வேறோடு சரிந்து சேதமடைந்துள்ளன. இதனால்,
விவசாயிகளும் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பொது முடக்கத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று பாதிப்பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது. எனவே, வாழை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
கடல் சீற்றம்: கன்னியாகுமரி கடல் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து சூறைக் காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சுமாா் 10 முதல் 20 அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக அலைகள் எழுந்தன. ஏற்கனவே, வங்கக் கடலில் உருவான அம்பான் புயல் காரணமாக கடந்த 2 நாள்களாக மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.