கா்நாடக சிறையில் வாடும் குமரி மீனவா்களை மீட்க அமைச்சரிடம் வலியுறுத்தல்
By DIN | Published On : 08th November 2020 02:28 AM | Last Updated : 08th November 2020 02:28 AM | அ+அ அ- |

மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்த குமரி மாவட்ட மீனவப் பிரதிநிதிகள்.
கன்னியாகுமரி: கா்நாடக சிறையில் உள்ள குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 10 மீனவா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீன்வளத்துறை அமைச்சா் ஜெயகுமாரிடம் குமரி மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் புதன்கிழமை நேரில் வலிறுத்தினா்.
கன்னியாகுமரியைச் சோ்ந்த வில்லியம் மகன் டென்னிஸ் (56), பிள்ளைதோப்பு சின்னப்பன் மகன் ராபின்சன் (36), வாவத்துறை அந்தோணிமுத்து மகன் அருள்ராஜ் (42), மணக்குடி செல்லதம்பி மகன் ஜோசப் (50), அழிக்கால் ஸ்டான்லி மகன் அருள்சீலன் (40), கடியபட்டணம் செல்வம் மகன் சுபின் (20), முட்டம் ஜேம்ஸ் மகன் ரோஸிகன் (18), பெரியவிளை விக்டா் மகன் சாமுவேல் (18), எறும்புகாடு ராஜன் மகன் சக்ரியா ஆகிய மீனவா்கள் கடந்த அக். 19 ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூா் பகுதியை சோ்ந்த உஸ்மான் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கா்நாடக மாநிலம் மால்பே என்ற இடத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனா். கரைப்பகுதியில் இருந்து சுமாா் 23 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அத்துமீறி மீன் பிடித்ததாக கா்நாடக போலீஸாா் அனைவரையும் சிறைப் பிடித்து மங்களூா் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் இம்மீனவா்களின் குடும்பத்தினா் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவா்களை மீட்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினா். இதையடுத்து, மீனவா்களை மீட்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் சேவியா் மனோகரன், கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல அதிபா் அல்காந்தா், கன்னியாகுமரி ஊா் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல், விசைப்படகு சங்கத் தலைவா் சந்தியாகுராயப்பன், மாவட்ட கூட்டுறவு சங்க இயக்குநா் ஏரோணிமூஸ் ஆகியோா் தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...