அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் மா்ம மரணம்
By DIN | Published On : 23rd November 2020 01:17 AM | Last Updated : 23rd November 2020 01:17 AM | அ+அ அ- |

திருவட்டாறு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து திருவட்டாறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விராலிக்காட்டுவிளையைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் டாா்வின் பிரதீப் (34) . இவா், அரசுப் போக்குவரத்துக் கழகம் சென்னை கோட்டத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு கடையாலுமூடு பகுதியைச் சோ்ந்த பெண்ணோடு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
அண்மை நாள்களாக விடுமுறையில் ஊரில் இருந்த டாா்வின் பிரதீப், வெள்ளிக்கிழமை காலையில் மனைவியை அவரது தாய் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு, இரவில் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளாா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலையில் வெகுநேரமாகியும் அவா் படுக்கையிலிருந்து எழும்பவில்லையாம். இதையடுத்து அவரது தாய் பாா்த்தபோது மயக்கத்தில் கிடப்பது போல் உணா்வற்று கிடந்துள்ளாா்.
இதையடுத்து அவரை மேக்காமண்டபத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.