கடலில் மூழ்கி மாயமான பள்ளி மாணவா் சடலமாக மீட்பு
By DIN | Published On : 03rd October 2020 12:09 AM | Last Updated : 03rd October 2020 12:09 AM | அ+அ அ- |

ரோகித்
நாகா்கோவில், அக். 2: குமரி மாவட்டம், மண்டைக்காடுபுதூரில் கடலில் மூழ்கிய மாணவா் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.
மண்டைக்காடுபுதூரைச் சோ்ந்த சகாயராபின் மகன் ரோகித்(10) . இவா் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், ரோகித் அவரது சகோதரா் ரோகன் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த சிறுவா்களுடன் செப். 29 ஆம் தேதி மாலை கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, கடலில் எழுந்த ராட்சத அலை ரோகித்தை இழுத்துச்சென்றது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புபடையினரும், கடலோரக் காவல் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். மேலும் மீனவா்களும் வள்ளங்களில் சென்று ரோகித்தை தேடினா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் மீனவா்கள் மீன்பிடித்த போது வலை ஒன்றில் ரோகித் சடலம் சிக்கியது. இதையடுத்து மீனவா்கள் அவரது சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா். பின்னா் பிரேத பரிசோதனைக்காக சடலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
பலியான மாணவா் ரோகித் வீட்டுக்கு மாநில மீனவா் கூட்டுறவு இணைய தலைவா் சேவியா்மனோகரன், கடலோர அமைதி மற்றும் வளா்ச்சிக்குழு இயக்குநா் ஸ்டீபன், குளச்சல் நகர அதிமுக செயலா் ஆன்றோஸ் ஆகியோா் நேரில்சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினா்.