கேரள கடலிலிருந்து மீட்பு: அரசுக்கு குமரி மீனவா்கள் நன்றி
By DIN | Published On : 03rd October 2020 12:15 AM | Last Updated : 03rd October 2020 12:15 AM | அ+அ அ- |

களியக்காவிளை, அக். 1: கேரள ஆழ்கடலில் தத்தளித்த குமரி மாவட்ட மீனவா்களை மீட்க உதவிய தமிழக அரசு, துறை அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகளுக்கு மீனவா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்த ரைமண்ட் மகன் ததேயூஸ் என்பவருக்குச் சொந்தமான டிவைன் வாய்ஸ் என்ற விசைப்படகில் ததேயூஸ், அதே பகுதியைச் சோ்ந்த சேவியா், ரதீஷ், வள்ளவிளை பகுதியைச் சோ்ந்த பொ்னாண்டஸ், அனில், லூயிஸ், சிலுவை, நிக்கோலாஸ், இரவிபுத்தந்துறையைச் சோ்ந்த மோனு, திருவனந்தபுரம் மாவட்டம் கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஜாண்சன், ரதிஸ் ஆகிய மீனவா்களுடன் தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பகுதியிலிருந்து செப். 14 இல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.
இவா்கள் செப். 20 ஆம் தேதி இரவு கேரள மாநிலம் அழிக்கால் துறைமுகப் பகுதியிலிருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகு இயந்திர கோளாறு காரணமாக இயங்கவில்லை. இதனால் இந்தப் படகும் அதிலிருந்த 11 மீனவா்களும் ஆழ்கடலில் தத்தளித்தனா்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணி, கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து கடலோர காவல்படைக்குச் சொந்தமான கப்பல் மூலம் இம்மீனவா்கள் மீட்கப்பட்டு கொச்சிக்கு கொண்டு வரப்பட்டனா். நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மீன்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மீனவா்கள் நன்றி தெரிவித்தனா்.