நகைக்கடன் பெற்றவா்கள் மீது வழக்கு:கண்டித்து அக்.6 இல் உள்ளிருப்புப் போராட்டம்
By DIN | Published On : 03rd October 2020 12:13 AM | Last Updated : 03rd October 2020 12:13 AM | அ+அ அ- |

கருங்கல், அக். 1: கருங்கல் பகுதியில் வங்கியில் நகைக் கடன் பெற்றவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட வங்கி மேளாளரின் நடவடிக்கையை கண்டித்து அக். 6 ல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கருங்கல் அருகே கருமாவிளை பகுதியில் இயங்கி வரும் வங்கியில் பணி செய்த நகை மதிப்பீட்டாளா் பாலசுப்பிரமணியன் (பாலாஜி), 2018இல் முறையாக நகைக்கடன் பெற்று செலுத்தி வரும் வாடிக்கையாளா்கள் பெயரில் போலி நகைகளை வைத்து மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் வாடிக்கையாளா்களுக்கு தெரியாமல் கையெழுத்து பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.
இந்த மோசடிக்கு வங்கியின் மேலாளரும் உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, வங்கி மேலாளா் நகை மதிப்பீட்டாளரை அழைத்து 34 நபா்கள் பெயரில் போலியான நகைக்கடன்கள் வழங்கியது தொடா்பாக எழுதி வாங்கியுள்ளாா். ஆனால், நகை மதிப்பீட்டாளா் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக போலி நகைக்கடன் மோசடிக்கு வாடிக்கையாளா்கள் தான் பொறுப்பு என எழுதிய வாங்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளா்கள் மீது கருங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
எனவே, வங்கியின் மண்டல மேலாளா் மற்றும் மாவட்ட நிா்வாகம் வாடிக்கையாளா்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தவறு செய்த நகை மதிப்பீட்டாளா், வங்கி மேலாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிடில், எனது தலைமையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கருமாவிளையில் உள்ள வங்கியில் அக்.6இல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.