கன்னியாகுமரிக்கு ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் புதிய சொகுசுப் படகு வருகை
By DIN | Published On : 26th September 2020 05:23 PM | Last Updated : 26th September 2020 05:23 PM | அ+அ அ- |

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்ல ரூ. 4 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் சொகுசுப்படகு சனிக்கிழமை கன்னியாகுமரி படகுத்துறை வந்தது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை நேரில் பார்த்துச் செல்ல வசதியாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் எம்.எல்.குகன், எம்.எல்.பொதிகை, எம்எல் விவேகானந்தா ஆகிய மூன்று படகுகளை இயக்கி வருகிறது. இந்தப் படகுகள் மூலம் குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று வந்தனர். இதனால் படகுத் துறையில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே கூடுதல் படகுகள் இயக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் நிதிஒதுக்கீடு மூலம் இரண்டு அதிநவீன சொகுசுப் படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு எம்.எல்.விவேகானந்தா என்ற படகு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது படகான எம்.எல்.திருவள்ளுவர் படகு சனிக்கிழமை பூம்புகார் படகுத்துறை வளாகத்தை வந்தடைந்தது. இந்த சொகுசுப் படகில் இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 27 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமுள்ள இந்த படகில் கீழ்தளத்தில் 131 இருக்கைகளும், மேல்தளத்தில் முக்கிய விருந்தினர்களுக்காக ஏ.சி வசதியுடன் கூடிய 19 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படகின் மேல்தளத்தில் பயணிகள் நின்று கொண்டு கடல் அழகினை ரசிக்கும் வகையில் இப்படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. படகில் தொலை தொடர்பு வசதி, உயிர்காக்கும் கருவிகள், அலங்கார தரைவிரிப்பு, ஆடியோ மற்றும் தொலக்காட்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும். தற்போது கரோனா நோய்த்தொற்று மற்றும் படகுதளம் சீரமைப்பு காரணங்களுக்காக படகுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் பயணிகள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...