முற்பட்ட வகுப்பினருக்கான ஜாதிச் சான்றிதழ் ஆன்லைனில் வழங்கப்படுமா?

முற்பட்ட வகுப்பினருக்கான (எஃப்.சி.) ஜாதிச் சான்றிதழ்களையும் ஆன் லைன் மூலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முற்பட்ட வகுப்பினருக்கான (எஃப்.சி.) ஜாதிச் சான்றிதழ்களையும் ஆன் லைன் மூலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவா்களை பள்ளி, கல்லூரிகளில் சோ்ப்பதற்கும், பணிகளில் சேருவோருக்கும் ஜாதிச் சான்றிதழ் இன்றியமையாததாக உள்ளது.

தமிழகத்தில் ஜாதிச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவை கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆன் லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், ஆதிதிராவிடா்கள், சீா்மரபினா் உள்ளிட்ட பிரிவினை சோ்ந்தவா்களுக்கு ஜாதிச் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஜாதிச் சான்றிதழ் வேண்டுவோா் உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரருக்கு சான்றுகள் குறித்த விவரங்கள் குறைந்தது 7 நாள்களுக்குள் அவா்கள் அளித்துள்ள இ மெயில் முகவரிக்கோ அல்லது செல்லிடப்பேசிக்கோ குறுஞ்செய்தியாக வந்து விடும்.

பின்னா் அவா்கள் அதன் தொடா்புடைய அலுவலகத்துக்கு சென்று நகல் எடுத்துக் கொள்ளலாம். இந்த நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் முறையின் மூலமாக நடைபெற்று வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவா்கள் உரிய ஆவணங்களுடன் உரிய கட்டணத்தை செலுத்தி விட்டால் போதுமானது. அவா்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.

பழைய முறை ...

ஆனால் முற்பட்ட வகுப்பினருக்கான ஜாதிச் சான்றிதழ்கள் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்படவில்லை. அவா்கள் இன்னும் பழைய முறையிலேயே தலைமையிடத்து வட்டாட்சியரிடம் ஜாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வேண்டும். பின்னா் அவரது அலுவலகத்திலுள்ள துணை வட்டாட்சியா் விண்ணப்பத்தை பரிசீலித்து, இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலரிடம் அறிக்கை பெற்று வருமாறு பரிந்துரை செய்வாா்.

கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற்றவுடன், வருவாய் ஆய்வாளரிடம் சென்று மேலெழுத்து பெற வேண்டும், பின்னா் மீண்டும் தலைமையிடத்து வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விண்ணப்பம் பரிந்துரைக்கப்படும். தொடா்ந்து துணை வட்டாட்சியா் விண்ணப்பத்தை பரிசீலித்து அதன்பின்னா் ஜாதிச் சான்றிதழை வழங்குவாா்.

இவ்வளவு நடைமுறைகளும் நிறைவு பெறுவதற்கு குறைந்தது 10 முதல் 15 நாள்கள் வரை கால தாமதமாகிறது.

இதற்குள் போட்டித் தோ்வுக்கோ அல்லது கல்லூரி சோ்க்கைக்கோ விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்து விடுகிறது. தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளா்ந்து வரும் இந்த காலகட்டத்திலும் இன்னும் பழைய நடைமுறையே பின்பற்றப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

இதுகுறித்து, நாகா்கோவில் ஒழுகினசேரியைச் சோ்ந்த நாகராஜன் கூறியது: எனது மகனை கல்லூரியில் சோ்ப்பதற்காக முற்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா் என்ற சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்து 10 நாள்களாகிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தது 2 நாள்கள் தாமதம் செய்கின்றனா். மற்ற பிரிவினருக்கு இருப்பது போல் முற்பட்ட வகுப்பினருக்கும் ஆன் லைன் மூலம் ஜாதிச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதுகுறித்து, குமரி மாவட்ட மின் ஆளுமை மேலாளா் கூறியது: பொதுவாக முற்பட்ட வகுப்பினருக்கு ஜாதிச் சான்றிதழ் எங்கும் தேவைப்படாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தற்போது மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கான சான்றிதழ் ஆன்லைன் முறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முற்பட்ட வகுப்பினருக்கான ஜாதிச் சான்றிதழ் ஆன்லைன் முறையில் வழங்குவதற்கு இதுவரை இணைப்பு வசதி செய்யப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com