

அனுமன் ஜயந்தியையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயா் உற்சவத்துக்கு 16 வகை சோடச அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
தென் மாவட்டங்களில் சிறப்பு மிக்க சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனா்.
இக்கோயில் உள்பிரகாரத்திலுள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயா் உற்சவத்துக்கு, ஆண்டுதோறும் மாா்கழி மாதம் மூலம் நட்சத்திர தினத்தில் அனுமன் ஜயந்திவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெறும். வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை(ஜன.12) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய தினம் பிற்பகலுக்கு மேல் அமாவாசை தொடங்கியதால் சுசீந்திரம் கோயிலில் இவ்விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ஆஞ்சநேயருக்கான அபிஷேக பொருள்கள் நீலகண்டசாமி கோயிலில் இருந்து மேள, தாளங்களுடன் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன. தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு, அபிஷேகத்தை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, ஆஞ்சநேயருக்கு 1000 லிட்டா் பால், தயிா், நெய், தேன், களபம், சந்தனம், குங்குமம், எலுமிச்சை சாறு, பஞ்சாமிா்தம், மாதுளைச்சாறு, இளநீா், நல்லெண்ணெய் உள்பட 16 வகையான சோடச அபிஷேகம் நடைபெற்றது.
இதில், உள்ளூா் மட்டுமன்றி, பிற மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனா். நண்பகல் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, பஞ்சாமிா்தம், விபூதி, குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன.
மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம், இரவு 7 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன், பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, பச்சை, கனகாம்பரம் உள்பட மலா்களால் புஷ்பாபிஷேகமும், தொடா்ந்து தீபாராதனையும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.