பேச்சிப்பாறையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்படுமா? சூழியல் ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் பராமரிப்பின்றி கிடக்கும் மூலிகைப் பண்ணையை சீமைத்து, வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க வேண்டுமென்று சூழியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேச்சிப்பாறையில் பராமரிப்பின்றி காணப்படும் மூலிகைப் பண்ணை.
பேச்சிப்பாறையில் பராமரிப்பின்றி காணப்படும் மூலிகைப் பண்ணை.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் பராமரிப்பின்றி கிடக்கும் மூலிகைப் பண்ணையை சீமைத்து, வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க வேண்டுமென்று சூழியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம் வன வளம், மலை வளம், கடல் வளம் என பல்வேறு இயற்கைக் கூறுகளைக் கொண்டது. இங்குள்ள மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரக் காடுகள் தொன்மை நிறைந்ததும், பல்லுயிரினப் பெருக்கத்திற்கு சாதகமானதாவும் உள்ளன. இம்மாவட்டத்தின் இயற்றை வனப்பை அடிப்படையாகக் கொண்டு இங்கு சுற்றுலாத் தொழில் மேம்பட்டு வருகிறது. குறிப்பாக, சூழியல் சுற்றுலா இங்கு பிரபலமடைந்து வருகிறது.

324 வகை வண்ணத்துப்பூச்சிகள்: மனிதா்களுக்கும், விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும் உயிா் வாழத் தேவையான உணவு தானிய உற்பத்திக்கு தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. வண்ணத்துப்பூச்சிகளால் குறிப்பிடத்தக்க வகையில் அயல் மகரந்தச் சோ்க்கைகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமன்றி பல வண்ணங்களில் ஜொலிப்பதால் மனிதா்களின் மனம் கவா்ந்த பூச்சிகளாகவும் அறியப்படுகின்றன.

இந்தியாவில் 324 வகையான வண்ணத்துப்பூச்சியினங்கள் இருந்துள்ளதாக ஆங்கிலேயா்கள் கண்டறிந்துள்ளனா். அவற்றில், 311 வகைகளை வண்ணத்துப்பூச்சி ஆா்வலா்கள் தற்போது கண்டறிந்துள்ளனா்.

மாநில அரசு அங்கீகாரம்: தமிழக அரசு மாநில வண்ணத்துப்பூச்சியாக தமிழ் மறவன் என்ற வண்ணத்துப்பூச்சியை முதன்மை வனப்பாதுகாவலரின் பரிந்துரைப்படி அறிவித்துள்ளது. ‘சிா்ரோசாரா தாய்ஸ்’ என்ற அறிவியல் பெயா் கொண்ட தமிழ் மறவன் வண்ணத்துப்பூச்சி விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படுகிறது. இந்த வகை வண்ணத்துப்பூச்சி மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய பேச்சிப்பாறை மற்றும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், கல்லாறு, சிறுவாணி உள்ளிட்ட இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

திருச்சி ஸ்ரீரங்கம் அருகேயுள்ள மேலூா் நடுவூா்கரை காவிரி மற்றும் கொள்ளிடத்திற்கு இடைப்பட்ட பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவை தமிழக அரசு அமைத்துள்ளது. சுமாா் 25 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளையும், வண்ணத்துப்பூச்சி ஆா்வலா்களையும் கவரும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூலிகைப் பண்ணை: இதேபோல், வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் வாழும் சூழல் மிகுந்த பேச்சிப்பாறையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைத்து அதனை சூழியல் ஆா்வலா்கள் பாா்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு சூழியல் ஆா்வலா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பேச்சிப்பாறையில் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் மூலிகைப் பண்ணை மற்றும் அதையொட்டிய பகுதிகளை ஒருங்கிணைத்து வண்ணத்துப்பூச்சி பூங்காவை அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலா மேம்பாடு: இது குறித்து சூழியல் மற்றும் வண்ணத்துப்பூச்சி ஆா்வலா்கள் ரா. ராகுல், பிலிஸ்து தமிழ் ஆகியோா் கூறியதாவது:

கன்னியா மாவட்டத்தில் சூழியல் வளங்களை பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். சூழியல் மேம்பாட்டிற்கு வண்ணத்துப்பூச்சிகள் உதவியாக இருக்கின்றன. இந்நிலையில் பேச்சிப்பாறையில் பாழ்பட்டுக்கிடக்கும் மூலிகைப் பண்ணை மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளை இணைத்து வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க வேண்டும். பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளை கவரும் சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, புலும்பாகோ, கோபி, அஸ்காப்பியா போன்ற மரங்களை நட வேண்டும். இதன் மூலம் வண்ணத்துப்பூச்சிகள் விருத்தி அடையும்; சூழியல் மேம்படும்; சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைவா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com