சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வியாபாரிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 17th August 2021 01:50 AM | Last Updated : 17th August 2021 01:50 AM | அ+அ அ- |

கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன் திரண்ட வியாபாரிகள்.
கன்னியாகுமரி: சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். கரோனா பொது முடக்கத்தால் கன்னியாகுமரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கன்னியாகுமரியில் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான கடை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதற்கிடையே, திங்கள்கிழமை கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தின் முன்பு திரண்ட வியாபாரிகள், தங்களின் வாழ்வாதாரம் கருதி சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து வியாபாரிகள் சங்கச் செயலா் பா.தம்பித்தங்கம் கூறியது: கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது கரோனா தாக்கம் குறைந்து வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரோனா பொது முடக்கத்தால் அனைத்துக் கடைகளும்
மூடப்பட்டுள்ளன. கடைகளுக்கான மின் கட்டணம், வாடகை செலுத்த முடியாத நிலையில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.