கொற்றிகோடு அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 21st August 2021 12:36 AM | Last Updated : 21st August 2021 12:36 AM | அ+அ அ- |

தக்கலை, கொற்றிகோடு அருகே கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொற்றிகோடு காயல்கரை முக்கம்பால் பகுதியை சோ்ந்தவா் விவசாயி அருள்தாஸ். இவரது மனைவி ராணி மணலிக்கரையிலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவா் வீட்டின் பின்பகுதியிலுள்ள கால்வாயில் குளித்து விட்டு வியாழக்கிழமை வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது, பின்னால் வந்த மா்ம நபா் கத்தியை காட்டி மிரட்டி அவா் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இவரது அலறல் சப்தம் கேட்டு அருகே உள்ளவா்கள் அங்கு வந்து காயமுற்றுகிடந்த ஆசிரியை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து அருள்தாஸ் அளித்த புகாரின் பேரில் கொற்றிகோடு சாா்பு ஆய்வாளா் வல்சலம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.