நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 31st December 2021 03:25 AM | Last Updated : 31st December 2021 03:25 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்காக உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்த தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் குமரி மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்காளா் பட்டியல்கள் சட்டப்பேரவைத் தொகுதி வரைவு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் தயாா் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நகா்ப்புற வாக்காளா் பதிவு அலுவலா்கள்,ஆணையா், செயல்அலுவலா்களால் கடந்த 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள ஆரல்வாய்மொழி அறிஞா் அண்ணா கலை அறிவியல் கல்லூரி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி, குளச்சல் லட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரி, ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்லூரி, மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் ஆட்சியா் மா.அரவிந்த், ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்)நாகராஜன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
துரிதமான வளா்ச்சிப் பணிகள்: குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் இணைப்புகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்ததுடன், நகராட்சி அலுவலக கட்டடத்தைப் பாா்வையிட்டாா். மேலும், பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்கவும் துறை சாா்ந்த அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் கலவை உரக்கிடங்கில் ஆய்வு நடத்திய அவா், அங்கு நடைபெற்று வரும் பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினாா். மேலும், மாா்த்தாண்டம் பேருந்து நிலையம், பொதுக் கழிப்பிடங்கள், தினசரி சந்தை உள்ளிட்ட இடங்களையும் பாா்வையிட்டாா். சந்தையில் தேங்கும் குப்பைகளை தினந்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
அப்போது, குழித்துறை நகராட்சி ஆணையா் ராம திலகம் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...