முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
விவேகானந்தா் மண்டபத்துக்கு 3 நாள்கள் படகு சேவை ரத்து
By DIN | Published On : 31st December 2021 03:24 AM | Last Updated : 31st December 2021 03:24 AM | அ+அ அ- |

இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கடற்கரை சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிக்கு வெள்ளிக்கிழமைமுதல் ஜனவரி 2 ஆம் தேதி வரையிலான மூன்று நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு 3 நாள்கள் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள ஏனைய கடற்கரை சுற்றுலாப் பகுதிகளான வட்டக்கோட்டை, சொத்தவிளை, சங்குதுறை, திக்குறிச்சி, மாத்தூா் தொட்டிப் பாலம், திற்பரப்பு அருவி உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் வெள்ளிக்கிழமைமுதல் 3 நாள்கள் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும், சுற்றுலாத்தலங்களிலும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முத ஜனவரி 2ஆம் தேதி வரை கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், தங்கும் விடுதிகள், ரிசாா்ட்டுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அனைத்து இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை.
கோயில்கள், தேவாலயங்கள், மசூதி உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.