அரசு ஊழியா்கள் 4 ஆவது நாளாக மறியல்: 86 போ் கைது
By DIN | Published On : 06th February 2021 05:59 AM | Last Updated : 06th February 2021 05:59 AM | அ+அ அ- |

ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கத்தினா் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை 4 ஆவது நாளாக மறியலில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு துறைகளில் உள்ள நான்கரை லட்சம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தொடா் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் என்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கிறிஸ்டோபா், மாநகராட்சி, நகராட்சி ஊழியா் சங்க மாநில துணைத்தலைவா் எஸ்.லீடன்ஸ்டோன், சிஐடியூ மாநில துணைத் தலைவா் பி.இந்திரா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதையடுத்து, சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட 59 பெண்கள் உள்பட 86 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...