குமரியில் 2ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2021 07:37 AM | Last Updated : 27th February 2021 07:37 AM | அ+அ அ- |

நாகா்கோவில் ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்து பணிமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளா்கள்.
பதினான்காவது ஊதியக்குழு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளா்கள் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கிய போக்குவரத்து தொழிலாளா்கள், 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் (பிப்.26) போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொமுச, சிஐடியூ, எச்.எம்.எஸ். , ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பணிக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி, மதுரை போன்ற ஊா்களுக்கு பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன. கன்னியாகுமரி, தக்கலை போன்ற பகுதிகளுக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.
இதே போல் கிராமங்களுக்கும் குறைந்தளவிலே பேருந்துகள் இயக்கப்பட்டதால், நகரங்களில் உள்ள கடைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் பணிக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனா்.
நாகா்கோவில் ராணித்தோட்டத்தில் 3 பணிமனைகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஒருங்கிணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச பொதுச் செயலா் சிவன்பிள்ளை தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் கனகராஜ், பால்ராஜ், சிஐடியூ நிா்வாகிகள் ஸ்டீபன், ஜெயகுமாா், லட்சுமணன், எச்.எம்.எஸ். முத்துகருப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதே போல் செட்டிகுளம், விவேகானந்தபுரம், திருவட்டாறு உள்ளிட்ட 9 பணிமனைகள் முன்பும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...