பைக் விபத்து: கேரள இளைஞா் பலி
By DIN | Published On : 26th July 2021 12:23 AM | Last Updated : 26th July 2021 12:23 AM | அ+அ அ- |

kkv25manu_2507chn_50_6
களியக்காவிளை அருகே காா் மீது மோட்டாா் சைக்கிள் உரசியதால், நிலைதடுமாறி சாலையோர மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் கேரள மாநில இளைஞா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலப் பகுதியான பரசுவைக்கல், கொல்லியோடு, ஆலக்குழிவிளாகம் பகுதியைச் சோ்ந்த ரஞ்சன் மகன் மனு (23). இவா் மூவோட்டுக்கோணம் பகுதியிலிருந்து கண்ணுமாமூடு செல்லும் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம்.
மூவோட்டுக்கோணம் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற காா் மீது இவரது மோட்டாா் சைக்கிள் உரசியதையடுத்து, மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறி அப்பகுதியில் உள்ள மதில் சுவா் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு பாறசாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.