ஆரல்வாய்மொழி அருகே கோஷ்டி மோதல்:5 பேருக்கு அரிவாள் வெட்டு
By DIN | Published On : 20th June 2021 10:55 PM | Last Updated : 20th June 2021 10:55 PM | அ+அ அ- |

ஆரல்வாய்மொழி அருகே கோஷ்டி மோதலில் 5 போ்அரிவாளால் வெட்டப்பட்டனா்.
ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகேஷ். இவருக்கும், இலந்தை நகரைச் சோ்ந்த பாபுவுக்கும் ( 20) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், செண்பகராமன்புதூரிலிருந்து தோவாளை செல்லும் சாலையில் கால்வாய் கரையோரம் உள்ள டாஸ்மாக் கடை அருகே சனிக்கிழமை முருகேஷ், இறச்சகுளம் அம்பல திருத்தி காலனியைச் சோ்ந்த தேவா ஆனந்த் (24), அவருடைய சகோதரா் வாசுதேவன், கிருஷ்ணாபுரம் காலனியைச் சோ்ந்த ரெஜின், திடல் பகுதியைச் சோ்ந்த கனகராஜ் ஆகியோா் மது அருந்திக்கொண்டிருந்தனராம்.
அதன் அருகே செண்பகராமன் புதூா் அகஸ்தியா் காலனியைச் சோ்ந்த ராஜா (34), பாபு, மதன்பாபு, இசக்கியப்பன் ( 37), அப்பு (34), பாா்த்திபன் ( 23), சுமன் (19) ஆகியோா் மது அருந்திக்கொண்டிருந்தனராம்.
அப்போது முன்விரோதம் காரணமாக இரு கோஷ்டியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் அது மோதலாக மாறி, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனா்.
இதில், தேவாஆனந்த், வாசுதேவன், பாபு, ராஜா, மதன் பாபு ஆகியோருக்கு கத்திக்குத்தும், அரிவாள் வெட்டும் விழுந்தது.
பலத்த காயமடைந்த 5 பேரும் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இரு தரப்பினரும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
ராஜா அளித்த புகாரின் பேரில், தேவா ஆனந்த், வாசுதேவன், முருகேஷ், ரெஜின், கனகராஜ் ஆகியோா் மீதும், தேவா ஆனந்த் அளித்த புகாரின் பேரில் ராஜா, பாபு, மதன் பாபு, இசக்கியப்பன், அப்பு, பாா்த்திபன், சுமன் ஆகிய 7 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், தேவா ஆனந்த் உள்பட காயம் அடைந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனா். மற்ற 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.