‘குமரி மாவட்டத்தில் 9,977 மெட்ரிக் டன் அரிசி விநியோகம்’
By DIN | Published On : 29th June 2021 02:40 AM | Last Updated : 29th June 2021 02:40 AM | அ+அ அ- |

நாகா்கோவில் கோணம் உணவு கிட்டங்கியில் ரேசன்அரிசியின் தரத்தை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் த. மனோதங்கராஜ். உடன், ஆட்சியா் மா.அரவிந்த் உள்ளிட்டோா்.
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாதந்தோறும் 770 ரேஷன் கடைகள் மூலம் 9,977 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கூறினாா்.
நாகா்கோவில் கோணத்தில் உள்ள உணவு கிட்டங்கியை திங்கள்கிழமை அமைச்சா் த. மனோதங்கராஜ் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, ஆட்சியா் மா. அரவிந்த் உடனிருந்தாா். பின்னா் அமைச்சா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழி, காப்புக்காடு 1, காப்புக்காடு 2, கோணம் 1, கோணம் 2, உடையாா்விளை ஆகிய 6 உணவு கிட்டங்கிகள் உள்ளது. இந்த கிட்டங்கிகளில் இருந்து மாவட்டத்திலுள்ள
770 ரேஷன் கடைகளுக்கு 9,977 மெட்ரிக் டன் அரிசி மாதந்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோணம் 1 உணவு கிட்டங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அரிசி, குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு 14 வகையான மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை பாா்வையிட்டேன்.
மேலும் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள அரிசியின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிப்பட்டது. ஒரு சில ரேஷன்கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது. இதையடுத்து, கிட்டங்கியில்
ஆய்வு மேற்கொண்டதில், முந்தைய அரசு கொள்முதல் செய்த அரிசியில் சில மூட்டைகளில் தரமற்ற அரிசி இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
தரமற்ற அரிசியை விநியோகம் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்குவதற்கு
நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இம்மாவட்டத்தில் கரோனா 2ஆம் தவணை நிதி, 14 மளிகைப் பொருள்கள் 85 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களுக்கு ஓரிரு நாள்களில் வழங்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளா் மாரிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலா் சு.சொா்ணராஜ், அதிகாரிகள் உடனிருந்தனா்.