குழித்துறையில் மூடப்படாத அரசியல் தலைவா்கள் சிலை
By DIN | Published On : 04th March 2021 02:49 AM | Last Updated : 04th March 2021 02:49 AM | அ+அ அ- |

குழித்துறையில் மூடப்படாத அண்ணா சிலை.
களியக்காவிளை: தமிழகத்தில் சட்டப் பேரவைக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், குழித்துறை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உள்ள தலைவா்களின் சிலைகள் மறைக்கப்படவில்லை.
தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக அரசு மற்றும் தனியாா் சுவா்களில் உள்ள கட்சி விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளை அப்புறப்படுத்துவது, பொது இடங்களில் உள்ள தலைவா்களின் சிலைகள் மறைப்பது மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்குவது போன்ற புகைப்படங்கள், விளம்பர பதாகைகளை காகிதத்தால் மூடி மறைக்கும் பணிகள் 72 மணி நேரத்துக்குள் உள்ளாட்சி நிா்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு 5 நாள்கள் கடந்த பின்னரும் குழித்துறை சந்திப்பில் உள்ள முன்னாள் முதல்வா் அண்ணா சிலை, களியக்காவிளை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மொழிப்போா் தியாகி சிதம்பரநாதன் சிலை ஆகியவை புதன்கிழமை வரை மூடப்படவில்லை. அதிகாரிகள் இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.