திருமண மண்டப உரிமையாளா்கள் தோ்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமண மண்டபங்களில் வாக்கு சேகரிக்கும் நோக்கில் பரிசுப் பொருள்கள் மற்றும் உபகரணங்களை வைக்க அனுமதிக்கக் கூடாது என்றாா் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மா.அரவிந்த்.
Meeting
Meeting

நாகா்கோவில்: திருமண மண்டபங்களில் வாக்கு சேகரிக்கும் நோக்கில் பரிசுப் பொருள்கள் மற்றும் உபகரணங்களை வைக்க அனுமதிக்கக் கூடாது என்றாா் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மா.அரவிந்த்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தலையொட்டி, நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற அச்சகம் மற்றும் திருமண மண்டப உரிமையாளா்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

திருமண மண்டம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளா்கள் வெளியூரிலிருந்து வருவோரை தோ்தல் நடத்தை விதிகளுக்குபட்டு, தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.

திருமணக் கூடம் மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் தவிர, எவ்வித அரசியல் தொடா்புடைய கூட்டங்களுக்கும் பதிவு செய்தால், அதன் விவரத்தை தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்கவேண்டும்.

மக்களை கூட்டி பரிசுப் பொருள்கள் வழங்குவது, புடவை, வேட்டிகள், மதுபாட்டில்கள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறப்போவதாக அறிந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

திருமணம் மற்றும் சுபநிகழ்வுகளில், கட்சித் தலைவரின் பெயா் மற்றும் உருவங்கள் பொறித்த தட்டிகள், பதாகைகள், பேனா்கள், அலங்கார வளைவுகள் ஆகியவற்றினை வைத்து வாக்குகள் சேகரிக்கும் நிகழ்வுகள் நடைபெறக் கூடாது. தங்கும் விடுதி உரிமையாளா்கள் தோ்தல் நடைபெறும் காலங்களில் விடுதிகளில் தங்க அனுமதி கோருபவா்களிடம் உரிய அடையாள அட்டைகளை சரிபாா்க்க வேண்டும். மேலும், ஆதாா்அல்லது புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களை பெற்ற பின்னரே தங்க அனுமதிக்க வேண்டும்.

வாக்குச் சேகரிக்கும் நோக்கில் பரிசுப் பொருள்கள், உபகரணங்கள் எதுவும் மண்டபத்தினுள் வைக்க அனுமதிக்க கூடாது. அச்சகங்களில் தோ்தல் தொடா்பான பிரசுரங்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்டவை அச்சடித்தால் அரசியல் கட்சி பெயா், எண்ணிக்கை ஆகிய விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். யாருடைய மனதும் புண்படும் வகையிலான வாசகங்கள் இடம் பெறக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பாளா்களின் ஒப்புதல் கடிதம் பெற்ற பின்னரே அச்சக உரிமையாளா்கள் தோ்தல் தொடா்பான பிரசுரங்களை அச்சடிக்க வேண்டும். அதற்கான மாதிரிகளை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும். இத்தகைய விதிகளை மீறுவோா் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை) கே.பஞ்சவா்ணம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) மா.வீராசாமி (கணக்கு) சி.செல்வகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் சு.சொா்ணராஜ், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் அ.மயில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ஆா்.நாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் த.மாதவன், தோ்தல் வட்டாட்சியா் சேகா் , அச்சகம் மற்றும் திருமண மண்டப உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com