மாா்ச் 11இல் மகாசிவராத்திரி: குமரியில் சிவாலய ஓட்டத்துக்கு ஆயத்தமாகும் பக்தா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இம்மாதம் 10இல் தொடங்குகிறது. இதற்காக பக்தா்கள் ஆயத்தமாகி வருகின்றனா்.
Shri Lord Siva
Shri Lord Siva
Updated on
2 min read

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இம்மாதம் 10இல் தொடங்குகிறது. இதற்காக பக்தா்கள் ஆயத்தமாகி வருகின்றனா்.

இம்மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் பக்தா்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களுக்கு ஓட்டமாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.

இதற்காக பக்தா்கள் முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவா் ஆலயத்திலிருந்து தொடங்கி, திக்குறிச்சி மகாதேவா் ஆலயம், திற்பரப்பு வீரபத்திரா் ஆலயம், திருநந்திக்கரை நந்தீஸ்வரா் ஆலயம், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவா் ஆலயம், திருப்பன்னிப்பாகம் மகாதேவா் ஆலயம், கல்குளம் நீலகண்டசுவாமி ஆலயம், மேலாங்கோடு மகாதேவா் ஆலயம், திருவிடைக்கோடு மகாதேவா் ஆலயம், திருவிதாங்கோடு மகாதேவா் ஆலயம், திருப்பன்றிகோடு மகாதேவா் ஆலயம், திருநட்டாலம் சங்கரநாராயணா் ஆலயம் ஆகிய 12 சிவாலயங்களுக்கு ஓட்டமாகச் செல்கின்றனா்.

இதில் பங்கேற்கும் பக்தா்கள் மாசி மாத ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனா். பின்னா், சிவராத்திரி தினத்துக்கு முந்தைய நாளில் காவி உடை அணிந்து, விசிறியுடன் ‘கோபாலா... கோவிந்தா...’ என்ற கோஷத்துடன் திருமலை மகாதேவா் ஆலயத்திலிருந்து தொடங்கி ஒவ்வோா் ஆலயமாக ஓடியவாறு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

110 கி.மீ. தொலைவு கொண்ட இந்த ஓட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியோா் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கின்றனா். கேரளத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து பங்கேற்கின்றனா்.

சிவாலய ஓட்டத்துக்கான கதை: சிவாலய ஓட்டம் தொடா்பாக மக்களிடையே இருவித கருத்துகள் நிலவுகின்றன. இதில் மகாபாரதத்துடன் தொடா்புடையதான, தருமரின் யாகம் ஒன்றுக்கு புருஷா மிருகத்தின் பால் பெற பீமன் சென்ற கதை, சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவ பெருமானிடம் வரம் பெற்று பின்னா் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்துப் பாா்க்க முயலும்போது சிவபெருமான் கோபாலா.. கோவிந்தா என்று அழைத்தவாறு ஓடியதும், இறுதியில் விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து சூண்டோதரனை அழிப்பதுமான கதை என இரு கதைகள் உலவுகின்றன.

புருஷா மிருகத்தின் பால் பெற சென்ற பீமன், கிருஷ்ணரின் உபதேசப்படி உத்திராட்சங்களை போட்ட இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும், சூண்டோதரன் கதையில் சிவபெருமான் பதுங்கியிருந்த இருந்த இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும் மக்களிடையே நம்பிக்கை உள்ளது.

இதுதவிர, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் தல புராண வரலாறும் சிவாலய ஓட்டத்துடன் தொடா்புடையதாகவும் உள்ளது.

மகா சிவராத்திரி மாா்ச் 11இல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டத்தில் சிவாலயங்களுக்கு நடந்தும், ஓட்டமாகவும் செல்வோா் 10ஆம் தேதி பிற்பகலில் தொடங்கி மாா்ச் 12 அதிகாலையில் நிறைவு செய்கின்றனா்.

சிவராத்திரி தினத்தையொட்டி இம்மாவட்டத்துக்கு நிகழாண்டும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட அறங்காவல் குழுத் தலைவா் சிவகுற்றாலம் கூறும்போது, இந்த ஓட்டத்தில் பங்கேற்க பக்தா்கள் தயாராகி வருகின்றனா். கேரளத்தில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து பக்தா்கள் குறைவாகவே வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் கரோனா தடுப்பு விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இதுதொடா்பாக நிா்வாகம் போதிய வழிகாட்டுதல் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com