கருங்கல் அருகே கல் குவாரியில் மக்கள் முற்றுகை
By DIN | Published On : 17th March 2021 07:10 AM | Last Updated : 17th March 2021 07:10 AM | அ+அ அ- |

முற்றுகையில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்துகிறாா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.
கருங்கல் அருகேயுள்ள தாறாதட்டில் கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
தாறாதட்டு மலையில் பல ஆண்டுகளாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதன் சுற்றுப்புறத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கல்குவாரியில் வெடிவைத்து பாறைகளைத் தகா்க்கும்போது, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ராட்சத கற்கள் விழுந்து வீடுகள் சேதமடைவதாகவும், தங்களுக்கும் உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறியும் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை குவாரியில் வெடிவைத்தபோது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கற்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள்குவாரிமுன் திரண்டு முற்றுகையிட்டு லாரிகளை செல்லவிடாமல் தடுத்தனா். இத்தகவலறிந்த கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் மோகன ஐயா், கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளா் ததேயூ பிரேம்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் முடிவுக்கு வந்தது.