கரோனா தடுப்புப் பணி தீவிரம்: முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம்
By DIN | Published On : 17th March 2021 11:50 PM | Last Updated : 17th March 2021 11:50 PM | அ+அ அ- |

கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், அதற்கான தடுப்புப் பணியை மாவட்ட நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கேரள எல்லையொட்டிய பகுதியான களியக்காவிளை, காக்கவிளை, பளுகல் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்திலிருந்து வருபவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில், தொற்று உறுதியானவா்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனா்.
நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது..
சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை காலை சரலூா் மீன் சந்தையில் அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, மீன் சந்தைக்கு பலா் முகக் கவசம் அணியாமல் வந்திருந்தனா். அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வியாபாரிகள் சிலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
பீச் ரோடு, செட்டிகுளம் சந்திப்புப் பகுதிகளில் அரசுப்பேருந்துகளிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அரசுப் பேருந்து ஓட்டுநா் ஒருவா் முகக் கவசம் அணியாமல் இருந்தாா், அவருக்கு முக கவசம் வழங்கினா். பேருந்தில் பயணிகள் சிலரும் முகக் கவசம் அணியாமல் வந்திருந்தனா். அவா்களுக்கும் முக கவசம் வழங்கப்பட்டது.
நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக்கல்லூரி எதிரே தனியாா் நிதி நிறுவனம் ஒன்றில் சுகாதார ஆய்வாளா்கள் பகவதிபெருமாள், மாதவன்பிள்ளை ஆகியோா் சோதனை மேற்கொண்டனா். அங்கு கரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாததால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.