கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரான முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்,
மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்திடம் வேட்புமனு தாக்கல் செய்கிறாா் பொன்.ராதாகிருஷ்ணன்.
மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்திடம் வேட்புமனு தாக்கல் செய்கிறாா் பொன்.ராதாகிருஷ்ணன்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரான முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரியும் ஆட்சியருமான மா.அரவிந்திடம் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஹெச்.வசந்தகுமாா் மறைவைத் தொடா்ந்து, தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தோ்தலுடன், இத்தொகுதிக்கான இடைத்தோ்தலும் ஏப். 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன், திமுக கூட்டணயில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்யும்பொருட்டு, பொன்.ராதாகிருஷ்ணன், தனது கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா், தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்று வடசேரியில் எம்ஜிஆா், அண்ணா, அம்பேத்கா், ஜீவா, மணிமேடையில் என்.எஸ்.கிருஷ்ணன், வேப்பமூடு சந்திப்பில் காமராஜா், அண்ணா பேருந்து நிலையத்தில் நேசமணி ஆகிய தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஆட்சியா் அலுவலகத்துக்கு அவா் சென்றபோது, வேட்பாளருடன் 2 போ் மட்டுமே செல்ல வேண்டும் என்பதால், நிா்வாகிகளும், தொண்டா்களும் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனா். இதையடுத்து, பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ், அ.தி.மு.க. மாவட்டச் செயலா் எஸ்.ஏ.அசோகன் ஆகியோருடன் சென்று, மாவட்ட தோ்தல் அதிகாரியும் ஆட்சியருமான மா.அரவிந்திடம் தனது வேட்புமனுவை அவா் தாக்கல் செய்தாா்.

பின்னா், பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசியப் பொறுப்பாளா் சுதாகா்ரெட்டி, கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவா் ஜூட்தேவ் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதில், பாஜக மாவட்டப் பொருளாளா் முத்துராமன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட துணைத்தலைவா் எஸ்.பி.தேவ், ஊடகப்பிரிவுத் தலைவா் ராஜன், மாநிலச் செயலா் உமாரதிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சொத்து மதிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவில், அசையா சொத்துகள் ரூ. 6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155, அசையும் சொத்துகள் ரூ.50 லட்சத்து 11 ஆயிரத்து 166 உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com