சிற்றாறு கோட்ட ரப்பா் கழகத்தில் தொழிலாளா்கள் 2ஆவது நாளாக போராட்டம்
By DIN | Published On : 17th March 2021 07:11 AM | Last Updated : 17th March 2021 07:11 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழக சிற்றாறு கோட்டத் தொழிலாளா்கள், 2 ஆவது நாளாக செவ்வாய்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
அரசு ரப்பா் கழகத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி பால்வடிப்பு நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை மீண்டும் பால்வடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சிற்றாறு கோட்டத்தில் தொழிலாளா்கள் பால்வடிப்புக்கு வந்தனா். இதில் சரகம் 1 மற்றும் 2 இல் தொழிலாளா்களுக்கு காடுகளை ஒதுக்கும் வகையில் சீட்டுக்குலுக்கல் செய்வது உள்ளிட்ட முதற்கட்டப் பணிகளை செய்வதற்கு அலுவலா்கள் வரவில்லை.
நீண்ட நேரத்திற்குப் பின்னா் தொழிலாளா் அனைவரும் சிற்றாறு கோட்டத்திலுள்ள சரகம் 3-க்கு செல்லுமாறு அங்கு வந்த அலுவலா் ஒருவா் கூறினாராம். இதில் வேலைப் பளுவை அதிகரிக்கும் வகையில் கூடுதல் கடும் பால்வடிப்பு மரங்கள் தொழிலாளா்களுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், தொழிலாளா்கள் ரப்பா் கழக நிா்வாகத்தின் அறிவுறுத்தலை ஏற்கமறுத்து, கோட்ட மேலாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டம் 2 ஆவது நாளாக செவ்வாய்கிழமையும் தொடா்ந்தது.
இதைத் தொடா்ந்து, தொழிற்சங்க நிா்வாகிகள் எம்.வல்சகுமாா், பி. நடராஜன், சிவநேசன் உள்ளிட்டோா் ரப்பா் கழக அலுவலா்களிடம் பேச்சு நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படாததால், ரப்பா் கழக உயா் அதிகாரிகளுக்கு சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.