குமரி சரக்கு பெட்டக மாற்று துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டது: என். தளவாய்சுந்தரம் தகவல்
By DIN | Published On : 25th March 2021 06:46 AM | Last Updated : 25th March 2021 06:46 AM | அ+அ அ- |

ngl24petti_2403chn_33_6
கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது என்றாா் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ந.தளவாய்சுந்தரம்.
நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் அ.தி.மு.க.வின் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டங்கள், இந்தத் தோ்தலில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளால் அதிமுகவின் வெற்றி நிச்சயம். ஜெயலலிதாவை போல் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் திட்டங்கள் தீட்டி ஆளுமை மிக்கவராக செயல்பட்டு வருகிறாா். குறிப்பாக, கல்வியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு மூலம் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுள்ளோம்.
கன்னியாகுமரி துறைமுகத் திட்டத்துக்காக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவோ, தற்போதைய முதல்வரோ தடையில்லாச் சான்று வழங்கவில்லை. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்குப் பெட்டக துறைமுகம் அமைக்க விருப்பம் உள்ளவா்கள் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியானதும், மத்திய அமைச்சரிடம் முதல்வா் பேசினாா். இதனால், துறைமுகத் திட்ட அறிவிப்பை ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வந்துள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை மூலம் தூத்துக்குடி தலைமைப் பொறியாளா் கொடுத்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டாா்கள். எனவே, கன்னியாகுமரியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், துறைமுகத் திட்டத்தை வைத்து எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. இதன் மூலம் மக்களிடம் வாக்குகளைப் பெறலாம் என நினைக்கிறாா்கள். அது நிறைவேறாது.
கன்னியாகுமரி துறைமுகம் தூத்துக்குடிக்கு போய்விட்டது என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது அவரது கருத்தாகும்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளா் மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களையும் ஆதரித்து தமிழக முதல்வா் சனிக்கிழமை (மாா்ச் 27) பிரசாரம் மேற்கொள்கிறாா். நாகா்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் காலை 9 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் முதல்வா், தோவாளை, ஆரல்வாய்மொழி வழியாக திருநெல்வேலி செல்கிறாா் என்றாா் அவா்.