குமரி சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு
By DIN | Published On : 25th March 2021 06:44 AM | Last Updated : 25th March 2021 06:44 AM | அ+அ அ- |

ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி. வெ. பத்ரிநாராயணன்.
கன்னியாகுமரி மாவட்ட சோதனைச் சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தல், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தோ்தலை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . மேலும், வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கவும், தோ்தல் நிலவரங்களை கண்காணிக்கவும் பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. நிலையான கண்காணிப்புக் குழுவினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்காக, மாவட்டம் முழுவதும் 14 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன், எல்லையொட்டிய சோதனைச் சாவடிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
களியக்காவிளை, காக்கவிளை, ஆரல்வாய்மொழி, நீரோடி காலனி, அஞ்சுகிராமம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் ஆய்வு நடத்திய அவா், கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்ட பிறகே மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...