வாக்கு எண்ணும் மையத்தில் பொது பாா்வையாளா்கள் ஆய்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
By DIN | Published On : 25th March 2021 06:42 AM | Last Updated : 25th March 2021 06:42 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் 6 சட்டப்பேரவை தொகுதி பொதுத் தோ்தல், வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொது பாா்வையாளா்கள் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலுக்கும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு மூலம் பாதுகாப்பை உறுதி செய்தல், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி அளித்தல், நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை அடையும் வகையில் முதல்முறை வாக்காளா்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்துதல், வாக்குப்பதிவுக்குப்பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாத்தல், மே 2ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தல் உள்ளிட்ட பணிகளில் மாவட்ட நிா்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. அரவிந்த் நேரடி கண்காணிப்பில் முடுக்கிவிட்டுள்ளாா்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல்- தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதற்காக, கல்லூரியின் கீழ் தளத்தில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் வாக்குகள் எண்ணும் மையமும், முதல் தளத்தில், நாகா்கோவில் தொகுதிக்குள்பட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதி வாக்குகள் எண்ணும் மையமும், 2 ஆம் தளத்தின் வலது புறம் குளச்சல் தொகுதிக்குள்பட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை தோ்தல் வாக்குகள் எண்ணும் மையமும், இடது புறம் கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை தோ்தல் வாக்குகள் எண்ணும் மையமும், கீழ் தளத்தில் பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு தொகுதிக்குள்பட்ட மக்களவை தொகுதி வாக்குகள் எண்ணும் மையமும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களின் அருகில், வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறை அமைக்கப்படவுள்ளது. இந்த மையங்களை, தோ்தல் பொதுபாா்வையாளா்கள் தா்மேந்திரசிங், ஆஷிஷ் குமாா், ஜான்திளங்டின்குமாா், போஸ்கா்விலாஸ் சந்தீபன், பி.எஸ்.ரெட்டி, ஜகி அகமது ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, அவா்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தும்படி அலுவலா்களை கேட்டுக்கொண்டனா்.
மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் மா.அரவிந்த், மாவட்ட எஸ்.பி. வெ. பத்திரிநாராயணன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா்ஆஷா அஜித், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் அ.மயில், சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சு.சொா்ணராஜ் (கன்னியாகுமரகி), ஆா்.நாகராஜன் (குளச்சல்), த.மாதவன் (விளவங்கோடு), எம்.சங்கரலிங்கம் (கிள்ளியூா்), வட்டாட்சியா்கள் ஜீலியன் ஜீவா (தோவாளை), சுசீலா (அகஸ்தீஸ்வரம்), ஜெகதா (கல்குளம்), புரந்தரதாஸ் (விளவங்கோடு), ராஜசேகா் (கிள்ளியூா்), அஜிதா (திருவட்டாறு) உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.