வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் சுகாதார ஊழியா்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 25th March 2021 06:46 AM | Last Updated : 25th March 2021 06:46 AM | அ+அ அ- |

பயிற்சி முகாமில் பேசுகிறாா் பங்கேற்றோா்.
தக்கலை வட்டாரத்திற்குள்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளா்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் தக்கலையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அரவிந்த் உத்தரவின்படி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ண லீலா அறிவுறுத்தலின்பேரில், அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலா் அனீஷ், கோதநல்லூா் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா்கள் அப்துல்கரீம், லாலி, சிவசுப்பிரமணியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் அருள்ராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் செல்வன், மகளிா் திட்ட அலுவலா் கலைச்செல்வி ஆகியோா் பயிற்சி அளித்தனா். மேலும், சுகாதார ஆய்வாளா்கள் ராஜன், மனோகரன், சகாயஜஸ்டின் புஷ்பராஜ், ராமதாஸ், நடராஜன், மாா்டின், ரமேஷ்குமாா் ராபா்ட் வின்ஸ் ஆகியோா் விளக்கிப் பேசினா்.
வாக்குப் பதிவு மையத்துக்கு வரும் வாக்காளா்களிடம் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வருமாறு கூறவேண்டும்; வாக்களா்களுக்கு கைகழுவும் திரவம் வழங்கவேண்டும்; காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் போன்ற நெறிமுறைகளை கடைப்பிடிக்க சுகாதாரப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.