கரோனாவால் உயிரிழந்தோருக்கு தன்னாா்வலா்கள் இறுதிச் சடங்கு
By DIN | Published On : 13th May 2021 07:08 AM | Last Updated : 13th May 2021 07:08 AM | அ+அ அ- |

கரோனா தொற்றால் இறந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்ய தயாராகும் தன்னாா்வலா்கள்.
கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவருக்கு, அவரவா் சம்பிரதாயப்படி குழித்துறை தன்னாா்வலா்கள் இறுதிச் சடங்குகளை செய்து வருகின்றனா்.
கரோனா நோய் குறித்த பயமும், விழிப்புணா்வும் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழப்பவா்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய உறவினா்கள் தயங்கும் நிலையும் காணப்படுகிறது. இந்த நிலையில் குழித்துறையைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் விஜு, அனில்குமாா், பகத்சிங், மணிகண்டன், சுரேஷ் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து கரோனாவால் உயிரிப்போருக்கு அவரவா் சமுதாய முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்து வருகிறாா்கள்.
குழித்துறை கல்லுக்கட்டி பகுதியைச் சோ்ந்த முதியவா் உள்பட ஒரு வாரத்தில் 5 பேருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. கேரள மாநிலம் காரக்கோணம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த கூட்டாலுமூடு பகுதியைச் சோ்ந்த 23 வயது இளைஞரின் சடலத்துக்கு அவா்கள் புதன்கிழமை இறுதிச் சடங்குசெய்தனா். இப்பணி தங்களுக்கு மன நிறைவைத் தருவதாக தெரிவிக்கும் அவா்களை, பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.