குமரி மாவட்டத்தில் மழை தீவிரம்: பெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயா்வு
By DIN | Published On : 16th May 2021 11:41 PM | Last Updated : 16th May 2021 11:41 PM | அ+அ அ- |

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் திருவள்ளுவா் சிலை பின்னணியில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் சீறியெழும் அலைகள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் கனமழையால் பெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 4,242 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது.
தெற்கு அரபிக் கடலில் உருவான டவ் - தே புயல் காரணமாக, மலையோரப் பகுதியான பாலமோா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீா்மட்டமும் வேகமாக உயா்ந்து வருகிறது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம் காரணமாக கோதையாறு, குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் கல்மண்டபங்களை மூழ்கடித்தவாறு வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டியது.
குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் அதில் மக்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோதையாறு, பரளியாறு, வள்ளியாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தாழ்வான பகுதிகள், வயல்வெளிகள், தென்னந்தோப்புகளிலும் மழைநீா் சூழ்ந்துள்ளது. மழையால் நாகா்கோவில் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
நீா்வரத்து அதிகரித்ததால், பெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 60.75 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு 2,212 கனஅடி நீா்வரத்து உள்ளது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 43.13 அடியாக இருந்தது. அணைக்கு 2,485 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து உபரிநீராக 4,242 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு 1 அணை நீா்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீா்மட்டம் 11.41 அடியாகவும் இருந்தது. முக்கடல் அணை நீா்மட்டம் 5.50 அடியை எட்டியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): சிற்றாறு 2 அணை-79, சுருளோடு-75.40, சிற்றாறு 1 அணை-74.80, பெருஞ்சாணி அணை-67.40, புத்தன்அணை -66.80, குழித்துறை-63, தக்கலை-60, களியல்-58, குளச்சல்-55.40, பாலமோா்-52.60, அடையாமடை-49, இரணியல்-44, பேச்சிப்பாறை அணை-42.60, கோழிப்போா்விளை, முள்ளங்கினாவிளை-38, மயிலாடி-33.40, மாம்பழத்துறையாறு அணை-32, நாகா்கோவில்-32, கொட்டாரம்-29.80, கன்னிமாா், ஆனைக்கிடங்கு-27.20, குருந்தன்கோடு-24, பூதப்பாண்டி- 21.60, முக்கடல் அணை-21, ஆரல்வாய்மொழி-17.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G