ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு ஒடிஸாவிலிருந்து வந்த 13 டன் ஆக்சிஜன்
By DIN | Published On : 19th May 2021 07:09 AM | Last Updated : 19th May 2021 07:09 AM | அ+அ அ- |

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு, ஒடிஸா மாநிலத்திலிருந்து 13.38 டன் ஆக்சிஜன் செவ்வாய்க்கிழமை வந்தது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமாா் 500 கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தினமும் 7 முதல் 8 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதைப் பூா்த்தி செய்வதற்காக, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வெளியூா் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஆக்சிஜன் உருளைகள் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்தும், திருச்சி, தஞ்சாவூரிலிருந்தும் ஆக்சிஜன் உருவளைகள் பெறப்பட்டன.
இந்நிலையில், ஒடிஸா மாநிலம், ரூா்கேலாவில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் மூலம் திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு, பின்னா் அங்கிருந்து லாரியில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு வரப்பெற்ற 13.38 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அங்குள்ள சேமிப்பு கிடங்கில் நிரப்பப்பட்டது. மேலும், கூடுதலாக ஆக்சிஜன் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.