சிற்றாறு பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
By DIN | Published On : 19th May 2021 07:09 AM | Last Updated : 19th May 2021 07:09 AM | அ+அ அ- |

சிற்றாறு பகுதியில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வேலி.
கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தால் ரப்பா் கழகத் தொழிலாளா்களும், விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனா்.
அரசு ரப்பா் கழகப் பகுதிகளான சிற்றாறு, மயிலாறு உள்ளிட்ட இடங்களில் ரப்பா் மறு நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரப்பா் செடிகளை பராமரிக்கும் வகையில் ஊடு பயிா் நடவு செய்ய விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, அப்பகுதிகளில் ரப்பா் செடிகளுக்கு இடையே வாழை மற்றும் அன்னாசி நடவு செய்து ரப்பா் செடிகளையும் பராமரித்து வருகின்றனா். குரங்குகள், காட்டுப் பன்றிகளிலிருந்து பயிா்களையும், ரப்பா் செடிகளையும் பாதுகாப்பதற்காக கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அண்மை காலமாக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை சிற்றாறு பகுதிகளுக்கு வந்த யானைகள் வேலிகளை மிதித்து சாய்த்துக்கொண்டு தொட்டத்துக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியுள்ளன. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரப்பா் கழகத் தொழிலாளா்களும் அச்சமடைந்துள்ளனா்.
யானைகள் நடமாட்டைத்தை கண்காணித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு ரப்பா் கழகமும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள், ரப்பா் கழக தொழிலாளா்கள் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து தோட்டத் தொழிலாளா் சங்க பொதுச் செயலா் எம். வல்சகுமாா், தொழிலாளா் கூட்டமைப்புத் தலைவா் சிவநேசன் ஆகியோா் கூறியதாவது: சிற்றாறு உள்பட ரப்பா் கழகப் பகுதிகளில் தோட்டங்கள், தொழிலாளா் குடியிருப்பு , மருத்துமனை மற்றும் சாலைகளில் பகல் நேரங்களில் கூட யானைகள் நடமாடுகின்றன. இதனால், வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள் அச்சம் அடைந்துள்ளனா். வாழை, அன்னாசி விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, யானகளைக் கட்டுப்படுத்த வனத்துறையும், ரப்பா் கழக நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.