அரசு விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 01st November 2021 12:43 AM | Last Updated : 01st November 2021 12:43 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன்படி, தோ்வு செய்யப்படுவோருக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 ஆம் தேதி பாராட்டு பத்திரமும், ரூ.1லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும். மேற்கூறிய தகுதியுடைய பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட திட்டஅலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம்), காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலமாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்பு கட்டடம், நாகா்கோவில் என்ற முகவரிக்கு நவம்பா் 25ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.