நவராத்திரிக்கு திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்ரகங்கள் கன்னியாகுமரிக்கு மீண்டும் திரும்பின

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜைக்கு சென்ற குமரி மாவட்ட சுவாமி விக்ரகங்கள் திங்கள்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு வந்தன.
கன்னியாகுமரி வந்தடைந்த சுவாமி விக்ரகங்கள்.
கன்னியாகுமரி வந்தடைந்த சுவாமி விக்ரகங்கள்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜைக்கு சென்ற குமரி மாவட்ட சுவாமி விக்ரகங்கள் திங்கள்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு வந்தன.

திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்திலிருந்து சரஸ்வதி அம்மன் சிலையும், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் மற்றும் குமாரகோவில் குமாரசுவாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு பூஜையில் வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் நிறைவுபெற்ற பின் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரும் வழக்கம். இந்நடைமுறை மன்னர் ஆட்சி காலம் முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கம்பர் பூஜித்ததாகக் கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி விக்ரகங்கள் பல்லக்கில் பத்மநாபபுரத்திலிருந்து அக். 3 ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு பவனியாக கொண்டுவரப்பட்டது. சுவாமி விக்ரகங்களுக்கு முன்னால், மன்னர் பயன்படுத்திய உடைவாள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து அக். 4 ஆம் தேதி களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் சுவாமி விக்ரகங்களுக்கு துப்பாக்கிய ஏந்திய கேரள போலீஸாரின் அணிவகுப்புடன், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டன.

இதைத் தொடர்ந்து நவராத்திரி பூஜைகள் நிறைவுபெற்றதையடுத்து அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை திரும்பிய சுவாமி சிலைகள் அன்றிரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோவிலில் இரவு தங்கலுக்குப் பின் திங்கள்கிழமை அங்கிருந்து திரும்பின. தொடர்ந்து காலை 9 மணியளவில் சுவாமி விக்ரகங்கள் களியக்காவிளைக்கு வந்தன. கேரள போலீஸார் உடன் வந்தனர். தொடர்ந்து சுவாமி ஊர்வல பொறுப்பை குமரி மாவட்ட அறநிலையத்துறை கண்காணிப்பாளர்கள் ப. ஆனந்த் (குழித்துறை), வி.என். சிவகுமார் (பத்மநாபபுரம்) ஆகியோரிடம் கேரள மாநில காவல்துறை சிறப்பு பிரிவு ஆய்வாளர் எஸ்.எஸ். அனில்குமார் ஒப்படைத்தார். 

திருவனந்தபுரம் ஊரக சிறப்புப் பிரிவு காவல்துறை உதவி ஆணையர் ஜோசப், திருவிதாங்கூர் நவராத்திரி சிறப்பு அறக்கட்டளை தலைவர் மாணிக்கம், செயலர் எஸ்.ஆர். ரமேஷ் ஆகியோர் உடனிருந்தார். தொடர்ந்து திங்கள்கிழமை குழித்துறை மகாதேவர் கோவிலில் இரவு தங்கலுக்குப் பின் சுவாமி விக்ரகங்கள் செவ்வாய்க்கிழமை பத்மநாபபுரம் சென்று அங்கிருந்து முன்னுதித்தநங்கை அம்மன் சுசீந்திரம் கோவிலுக்கும், குமாரசுவாமி வேளிமலை கோவிலுக்கும் செல்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com