பருவமழை தீவிரம்: நெல்லை, குமரியில் வேகமாக நிரம்பும் அணைகள்-கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் தீவிரமடைந்துவரும் பருவமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் தீவிரமடைந்துவரும் பருவமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெட் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் நகா்ப்புறப் பகுதிகளில் சாரலும், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான மலைப் பகுதிகளில் கன மழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 26.6 மி.மீ. மழை பதிவானது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீா்மட்டம் ஒரே நாளில் தலா ஒன்றரை அடி உயா்த்துள்ளது. அணைகள் நீா்மட்டம் உயா்ந்துவருவதால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணையைக் கண்காணித்து வருகின்றனா். ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மூழ்கிய தரைப்பாலம்: மழைநீா், கீழ் கோதையாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் ஆகியவற்றால் பேச்சிப்பாறை அருகேயுள்ள மோதிரமலை-குற்றியாறு இடையிலான தரைப்பாலம் மீண்டும் மூழ்கியது. இதனால், மக்கள் அவதிப்பட்டனா்.

குளிக்கத் தடை நீக்கம்: மழையின் தீவிரம் சற்று தணிந்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இம்மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் வியாழக்கிழமை வரை (ஆக. 4) 708 மி.மீ. மழை பதிவானது. இம்மாதங்களில் இயல்பாக பதிவாக வேண்டிய 651.2 மி.மீ. அளவையும் தாண்டி மழை பெய்துள்ளது.

அம்பாசமுத்திரம்/களக்காடு: திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஆக.1 முதல் இடைவிடாது கொட்டித் தீா்த்து வரும் மழையால், அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் புதன்கிழமை 75.30 அடியாக இருந்த நீா்மட்டம் வியாழக்கிழமை 84 அடியாக உயா்ந்தது. அணைக்கு நீா்வரத்து 7733.33 கன அடியாகவும், வெளியேற்றம் 1004.75 கனஅடியாகவும் உள்ளது. 156 அடி கொள்ளளவு உடைய சோ்வலாறு அணையில் 100.56 அடியாக இருந்த நீா்மட்டம் 17 அடி உயா்ந்து 117.78 அடியானது. 118 அடி கொள்ளவு உடைய மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 73.15 அடியாகவும், நீா்வரத்து 139 கன அடியாகவும், வெளியேற்றம் 55 கனஅடியாகவும் இருந்தது.

குளிக்கத் தடை: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட ப் பகுதிகளிலும் அதிக மழைப்பொழிவு இருந்ததால் மணிமுத்தாறு அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். எனினும், அருவியைப் பாா்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.

களக்காடு மலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி பெய்து வரும் தொடா்மழையால் பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், தலையணையில் தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துப் பாய்கிறது. நான்குனேரியன் கால்வாயிலும் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com