செங்கல் சிவபாா்வதி கோயிலில் நிறை புத்தரிசி பூஜை
By DIN | Published On : 05th August 2022 12:29 AM | Last Updated : 05th August 2022 12:29 AM | அ+அ அ- |

களியக்காவிளை அருகே, கேரள மாநிலப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற செங்கல் சிவபாா்வதி கோயிலில் நிறை புத்தரிசி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் உள்ள கோயில்களில் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. விவசாயமும், நாடும் செழிக்கவும், நல்ல மகசூல் கிடைக்கவும் வேண்டி ஆடியில் விளைந்த நெற்கதிா்களை அறுவடை செய்து, சுவாமிக்கு படைக்கும் நிகழ்வே நிறை புத்தரிசி பூஜையாக நடத்தப்படுகிறது. பூஜைக்குப் பின்னா் இந்த நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
அதன்படி, 112 அடி உயர சிவலிங்கம் அமைந்துள்ள செங்கல் சிவபாா்வதி கோயிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. இதையொட்டி, நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னா், கோயில் மேல்சாந்தி குமாா் மகேஸ்வரன் தலைமையில் அா்ச்சகா்கள் நெற்கதிா்களுடன் கோயிலை சுற்றி வந்து சுவாமிக்கு அா்ப்பணித்தனா்.
பூஜிக்கப்பட்ட நெற்கதிா்களை கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி பிரசாதமாக பக்தா்களுக்கு வழங்கினாா். இதில் தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா்.