குமரி பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை
By DIN | Published On : 05th August 2022 12:26 AM | Last Updated : 05th August 2022 12:26 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆடிமாத நிறை புத்தரிசி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
நெற்பயிா்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு நிறை புத்தரிசி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அறநிலையத் துறைக்குச் சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிா்கள் அறுவடை செய்யப்பட்டு, அறுவடை சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னா் பகவதியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. மூலஸ்தான மண்டபத்தில் உள்ள அம்மன் பாதத்தில் நெற்கதிா்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து நெற்கதிா்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. பின்னா் நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
நிறை புத்தரிசி பூஜையையொட்டி பகவதியம்மனுக்கு தங்கக் கவசம், வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.