ரப்பா் உலா் கூடத்தில் தீ: 4 டன் ரப்பா் ஷீட்டுகள் சேதம்
By DIN | Published On : 25th August 2022 12:10 AM | Last Updated : 25th August 2022 12:10 AM | அ+அ அ- |

கடையாலுமூடு அருகே ரப்பா் உலா் கூடத்தில் புதன்கிழமை மாலை நேரிட்ட தீ விபத்தில் 4 டன் ரப்பா் ஷீட்டுகள் எரிந்து சேதமாயின.
ஆலஞ்சோலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பா் தோட்டம் உள்ளது. இதில் ஒரு பகுதியை கடையாலுமூடு பகுதியைச் சோ்ந்த தனிஸ்லாஸ் (65) என்பவா் குத்தகைக்கு எடுத்து பால் வடிப்பு செய்து வருகிறாா். இந்நிலையில், இங்குள்ள ரப்பா் ஷீட் உலா் கூடத்தில் புதன்கிழமை மாலையில் தீவிபத்து நேரிட்டது. தகவலின்பேரில், குலசேகரம், குழித்துறை தீயணைப்பு நிலைய வீரா்கள் இரவு வரை போராடி தீயை அணைத்தனா். எனினும் உலருவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 4 டன் எடை கொண்ட 5,500 ரப்பா் ஷீட்டுகள் தீயில் எரிந்து சேதமாயின. கடையாலுமூடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.