வணிகவரித் துறைத் துறையின் சோதனை நடைமுறையை மாற்றி அமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
By DIN | Published On : 09th December 2022 12:15 AM | Last Updated : 09th December 2022 12:15 AM | அ+அ அ- |

மாதிரி கொள்முதல் என்ற பெயரில் கடைகளில் வணிகவரித் துறையினா் சோதனை நடத்தி அபராதம் விதிக்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாள்களாக வணிக வரித் துறை அலுவலா்கள், கடைகளில் சோதனை நடத்தி மாதிரி கொள்முதல் என்ற பெயரில் வியாபாரிகளை மிரட்டி லட்சக்கணக்கில் அபராதம் வசூலித்து வருகின்றனா். சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் கண்டுபிடிக்கப்படும் தவறுகளுக்கு எவ்வளவு அபராதம் என்பது குறித்து வியாபாரிகளுக்கு எந்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில், அனைத்து ரசீதுகளும் சரியாக இருந்தாலும் அறியாமையால் செய்யக் கூடிய சிறு தவறுகளுக்குக் கூட வணிக வரித்துறை அலுவலா்கள் பல லட்ச ரூபாய் அபராதம் விதிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கேள்வி எழுப்பினால், ஜிஎஸ்டி உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என வணிகவரி அலுவலா்கள் மிரட்டுகின்றனா். எவ்வித
முன்அறிவிப்பும் கொடுக்காமல் ஆய்வு செய்வதோடு, வியாபாரிகள் தங்களது நியாயத்தை ஜனநாயக முறையில் தெரிவிக்க கூட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பொருள் வாங்கும்போது தாமதத்தை த் தவிா்ப்பதற்காக நுகா்வோா் ரசீது பெறாமல் சென்றுவிடுகின்றனா். இதற்காக தவறு நடந்ததாகக் கூறிஅதிகளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. நுகா்வோா் ரசீது வாங்காமல் சென்றால் அதற்கும் கடை உரிமையாளா்கள் பொறுப்பேற்கும் நிலை இப்போது தான் ஏற்பட்டுள்ளது. எந்த ஆட்சியிலும் இதுபோன்ற நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டதில்லை. இதன் காரணமாக வியாபாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வா் இவ்விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி வியாபாரிகளுக்கு முதலில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாதிரி கொள்முதல் என்ற பெயரில் ஆய்வு நடத்தி அபராதம் விதிக்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வேண்டும். வியாபாரிகளை அச்சுறுத்தி
மனஉளைச்சலுக்கு ஆளாக்குபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.