திற்பரப்பு அருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
By DIN | Published On : 11th December 2022 05:47 AM | Last Updated : 11th December 2022 05:47 AM | அ+அ அ- |

பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் சனிக்கிழமை மூடப்பட்டு உபரித் தண்ணீா் வெளிவேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
மாண்டஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்பட்டது. இதனால், பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டத்தை கட்டுப்பாடான அளவில் வைக்கும் வகையில் கடந்த திங்கள்கிழமை முதல் இந்த அணையின் மறுகால் மதகுகள் வழியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டது. புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், சாரல் மழை மட்டுமே பெய்தது. இதனையடுத்து பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் சனிக்கிழமை காலையில் மூடப்பட்டு, உபரித் தண்ணீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி: பேச்சிப்பாறை அணையில் உபரிநீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்ட நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு சனிக்கிழமை பிற்பகல் முதல் அனுமதிக்கப்பட்டனா். அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் பரவலாக சாரல் மழை பெய்தது.