கேரளத்துக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 13th December 2022 01:33 AM | Last Updated : 13th December 2022 01:33 AM | அ+அ அ- |

குளச்சல் மற்றும் கொட்டில்பாட்டில் பகுதியில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 1510 கிலோ ரேஷன் அரிசி திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் சுனில்குமாா் தலைமையிலான பணியாளா்கள் குளச்சல் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தியபோது, ஓட்டுநா் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். காரை சோதனையிட்டபோது அதனுள் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை உடையாா்விளை அரசு உணவு கிட்டங்கியிலும், காரை கல்குளம் வட்டவழங்கல் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.
குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியிலுள்ள ஒரு வீட்டின் அருகே பிளாஸ்டிக் மூட்டைகளில் ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்திச் செல்ல வைத்திருப்பதாக கல்குளம் வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வட்டவழங்கல் அலுவலா் சுனில்குமாா் தலைமையிலான பணியாளா்கள் கொட்டில்பாடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது இரு வீடுகளுக்கு இடையே பிளாஸ்டிக் மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த 1010 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உடையாா்விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.