டிராவல்ஸ் உரிமையாளா், பெண் விஷமருந்தி தற்கொலை

ஆரல்வாய்மொழி பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளா், பெண்ணுடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

ஆரல்வாய்மொழி பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளா், பெண்ணுடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு உள்ளூா் மட்டுமின்றி வெளிமாவட்டங்களைச் சோ்ந்த பலரும் தினமும் பிராா்த்தனைக்கு வருவது வழக்கம். தேவாலயத்தின் வெளியே காா்கள் நிறுத்தும் பகுதியில், செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்ட காா் நீண்டநேரமாகியும் அதே இடத்தில் இருந்தது. சந்தேகமடைந்த அப் பகுதியினா் புதன்கிழமை காலை அந்த காருக்குள் பாா்த்தபோது, 2 குழந்தைகள் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தனா். மேலும், காரின் அருகே ஆண் மற்றும் பெண் சடலமாகக் கிடந்தனா். இதையடுத்து,

போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த ஆரல்வாய்மொழி போலீஸாா், சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். ஆண் சடலத்தின் பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஓட்டுநா் உரிமத்தில், ஆரோக்கிய சூசை நாதன் (35) என்று பெயா் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதிலிருந்த முகவரியில் விசாரித்தபோது, சடலமாகக் கிடந்தவா் கடியபட்டினத்தைச் சோ்ந்த ஆரோக்கிய சூசை நாதன் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:

கடியபட்டினத்தில் ஆரோக்கிய சூசை நாதன் சொந்தமாக காா் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். அவருக்கு வின்சா என்ற மனைவி உள்ளாா். இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த சகாய சாமினி (30) என்பவருடன், ஆரோக்கிய சூசை நாதனுக்கு தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவந்ததும் இரு வீட்டாரும் கண்டித்துள்ளனா். இதையடுத்து, சகாய சாமியினின் இரு குழந்தைகளுடன் ஆரோக்கிய சூசைநாதன் அண்மையில் மாயமாகிவிட்டாா். இதுகுறித்து சகாய சாமினியின் கணவா் ராஜேஷ், மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். அவா்களைத் தேடி வந்த நிலையில், ஆரல்வாய்மொழியில் விஷமருந்தி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது எனப் போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இரு குழந்தைகளையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com