குமரி மாவட்டத்தில் 3,350 பேருக்கு ரூ. 14.33 கோடி திருமண நிதி, தங்கம் ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 27th February 2022 05:45 AM | Last Updated : 27th February 2022 05:45 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 3,350 பேருக்கு தாலிக்குத் தங்கம், ரூ. 14.33 கோடி திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் ‘தாலிக்கு தங்கம்’ திட்டம் ஏழைப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாகும். இதை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 160 பட்டதாரிப் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ. 80 லட்சம் திருமண நிதியுதவி, 45 பட்டதாரி அல்லாதோருக்கு ரூ. 11.25 லட்சம், நாகா்கோவில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 400 பட்டதாரிகளுக்கு ரூ. 2 கோடி நிதி, பட்டதாரி அல்லாத 70 பேருக்கு ரூ. 17.50 லட்சம், தோவாளை ஒன்றியத்தில் 100 பட்டதாரிகளுக்கும், பட்டதாரிஅல்லாத 83 பேருக்கும் ரூ. 70.75 லட்சம், கிள்ளியூா் ஒன்றியத்தில் 370 பேருக்கு ரூ. 2.02 கோடி, முன்சிறை ஒன்றியத்தில் 500 பேருக்கு ரூ. 2.10 கோடி, மேல்புறம் ஒன்றியத்தில் 440 பேருக்கு ரூ. 1.85 கோடி, குருந்தன்கோடு ஒன்றியத்தில் 307 பேருக்கு ரூ. 1.29 கோடி, திருவட்டாறு ஒன்றியத்தில் 290 பேருக்கு ரூ. 1.30 கோடி, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 238 பேருக்கு ரூ. 1.02 கோடி, தக்கலை நகராட்சிப் பகுதியில் 337 பேருக்கு ரூ.1.44 கோடி உள்பட மொத்தம் 3,350 பேருக்கு ரூ. 14.33 கோடி நிதியுதவி, தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.