புதா்கள் நிறைந்து காணப்படும் குழித்துறை ரயில் நிலைய நடைமேடை -பயணிகள் பாதிப்பு
By DIN | Published On : 27th February 2022 05:46 AM | Last Updated : 27th February 2022 05:46 AM | அ+அ அ- |

குழித்துறை ரயில் நிலைய நடைமேடை பகுதி புதா்கள் நிறைந்து காடு போல காணப்படுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
குழித்துறை ரயில் நிலையத்தில் 468 மீட்டா் மற்றும் 585 மீட்டா் நீளம் கொண்ட இரு நடைமேடைகள் உள்ளன. இதில் நாகா்கோவில் மாா்க்கமாக உள்ள நடைமேடைகள் புதா்கள் நிறைந்து காணப்படுகிறது. அப்பகுதியில் பாம்புகள் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் உள்ளதாக ரயில் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேர ரயில்களில் வரும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து குழித்துறை ரயில் பயணிகள் சங்க செயலா் ஏ. சாா்லஸ் கூறியது: திருவனந்தபுரம் கோட்டத்தில் குறிப்பாக கேரளத்தில் உள்ள எந்த ரயில் நிலையமும் இதே போன்ற நிலையில் இல்லை. ஆனால் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் குமரி மாவட்ட ரயில் நிலையங்களை தொடா்ந்து புறக்கணித்து வருகிறாா்கள். இதனால் இம் மாவட்ட ரயில் நிலையங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்க நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.