குமரி மாவட்டத்தில் பிப்.1முதல் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 26th January 2022 08:24 AM | Last Updated : 26th January 2022 08:24 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில், கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் பிப். 1ஆம் தேதி தொடங்கி 2 வாரங்கள் நடைபெறும் என ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோழிகளுக்கு இறப்பை ஏற்படுத்தும் நச்சு உயிரியால் பரப்பப்படும் கழிச்சல் நோய், பிற கோழிகளுக்கும் வேகமாகப் பரவி பெருமளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இந்நோயைத் தடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு குறியீடாக 1,50,600 தடுப்பூசிகள் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. பிப்.1முதல் 14 ஆம் தேதி வரை குறிப்பிட்ட நாள்களில் கிராமங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்த கால்நடை மருத்துவ அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கால்நடை விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளை அணுகி முகாம் குறித்த விவரங்களைப் பெற்று கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தி பயன் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...