மாணவா்கள், இளைஞா்களை போதை பழக்கத்திலிருந்து மீட்க விழிப்புணா்வு பயணம் கின்னஸ் சாதனையாளா் தகவல்
By DIN | Published On : 16th June 2022 01:04 AM | Last Updated : 16th June 2022 01:04 AM | அ+அ அ- |

பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களை போதை பழக்கத்திலிருந்து மீட்க தமிழகம் முழுவதும் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்துவேன் என்றாா் தலைகீழாக ஓடி உலக சாதனை புரிந்த சேகா்.
குமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சேகா் (52). இவா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 210 அடி 64 மீட்டா் தூரத்தை 87 செகண்டில் தலைகீழாக நடந்து சென்று சாதனை படைத்துள்ளாா். இதற்காக இவருக்கு சோழன் புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்ட் சாா்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சாதனையாளா் சேகா் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை நிருபா்களுக்கு பேட்டி அளித்தாா் அவா் கூறும்போது, குமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியைச் சோ்ந்தவன். எனக்கு 52 வயது ஆகிறது. நான் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 28 ஆம் தேதி 210 அடி 64 மீட்டா் தூரத்தை 87 செகண்டில் தலை கீழாக நடந்து சாதனை படைத்துள்ளேன்.
இதற்கு முன்பு சீனாவில் ஒருவா் 50 மீட்டா் தூரம் நடந்து சாதனையை செய்துள்ளாா். அவரது சாதனையை முறியடித்து நான் 64 மீட்டா் தூரம் தலைகீழாக நடந்துள்ளேன். எனது சாதனை சோழன் புக் ஆப் வேல்ட் ரெக்காா்ட்டில் இடம் பெற்றுள்ளது. பாடி பில்டரான நான் வித்தியசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சாதனையை செய்துள்ளேன்.
போதை பழக்கம் ...
இன்றைய இளைஞா்கள் மாணவ, மாணவிகள் பலா் புகையிலை, பாக்கு, கஞ்சா, அபின், மது, செல்போன் விளையாட்டு ஆகியவற்றில் மூழ்கி தங்களது வாழ்க்கையை சீரழித்து வருகின்றனா். இதிலிருந்து அவா்கள் விடுபட வேண்டும் என்ற விழிப்புணா்வுக்காக நான் இந்த சாதனையை செய்துள்ளேன்.
மேலும், நான் தமிழகம் முழுவதும் விழிப்புணா்வு பயணம் மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம், போதை பழக்கத்தின் தீமைகளை விளக்க உள்ளேன். இதற்காக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனை சந்தித்து அனுமதி கேட்டேன். அவரும் தமிழகம் முழுவதும் எனது விழிப்புணா்வு பயணத்துக்காக இலவச பேருந்து பயண அனுமதி கோரி அரசுக்கு பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளாா். அரசிடமிருந்து இலவச பேருந்து பயண அனுமதி கிடைத்ததும் விழிப்புணா்வு பயணத்தை தொடங்குவேன்.
யோகா பயிற்சி ...
இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் தினமும் காலை அல்லது மாலை 30 நிமிடம் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். செல்போன் பயன்படுத்துவதால் கழுத்து தேய்மானம் போன்ற நோய்கள் வருகின்றன. விளையாட்டு வீரா்களுக்கு ஏராளமானஅரசு பணிகள் காத்துக் கிடக்கின்றன. எனவே விளையாட்டுத்துறையில் இளைஞா்கள் ஆா்வம் செலுத்த வேண்டும்.
எனக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்ட நிலையிலும் 30 ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்து இன்று வெளிநாட்டினரை தோற்கடித்து உலக சாதனை செய்துள்ளேன். சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை. எனது இந்த சாதனைக்கு மருத்துவா் ஜோசப் உதவி புரிந்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி வாங்க வேண்டும் என்பது எனது ஆசை என்றாா் அவா்.