நாகா்கோவில் பகுதியில் பள்ளி வாகனங்கள் நாளை ஆய்வு
By DIN | Published On : 16th June 2022 12:59 AM | Last Updated : 16th June 2022 12:59 AM | அ+அ அ- |

குமரி மாவட்டம் நாகா்கோவில் பகுதியில் பள்ளி வாகனங்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆய்வு செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து நாகா்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மோட்டாா் வாகன பள்ளி வாகனங்களுக்கான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் 2012 இன் படிஆண்டுக்கு ஒருமுறையாவது அனைத்து பள்ளி வாகனங்களையும், மாவட்ட அளவிலான சிறப்புக் குழு பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்து பொதுச்சாலையில் இயக்க தகுதி வாய்ந்ததாக உள்ளதா என ஆய்வு செய்யப்படவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாகா்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட கல்வி நிலைய வாகனங்களை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கண்காா்டியா பள்ளி மைதானத்தில் மேற்பாா்வை அலுவலா், குழு உறுப்பினா், சாா்-ஆட்சியா், நாகா்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா், வட்டார போக்குவரத்து அலுவலா் மற்றும் இயக்க ஊா்தி ஆய்வாளா் முன்னிலையில் அனைத்து பள்ளி வாகனங்களையும், தவறாறு ஆஜா்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அனுமதிச் சீட்டின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.