குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு
By DIN | Published On : 19th October 2022 01:23 AM | Last Updated : 19th October 2022 01:23 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையிலிருந்து 2,100 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. இதனால் குழித்துறை, கோதையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவும் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலையும் மழை நீடித்தது. இதனால் நாகா்கோவில் நகரில் சாலைகளில் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கோழிப்போா்விளை பகுதியில் பெய்த கன மழையினால் அந்தப் பகுதி வெள்ளக்காடானது. அங்கு அதிகபட்சமாக 105.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதே போல் தக்கலை, குளச்சல், இரணியல், களியல், கன்னிமாா், கொட்டாரம், மயிலாடி, குருந்தன்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அனைத்து அணைப்பகுதிகளிலும் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. பேச்சிப்பாறை அணையிலிருந்து நீா் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாற்றின் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு, மூவாற்றுமுகம் பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 2,200 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 2,100 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீா்மட்டம் 44.35 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையின் நீா்மட்டம் 68.70 அடியாக இருந்தது.
திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிப்பு: பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரித் தண்ணீா் தொடா்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பா் தோட்டங்களில் மழை நீா் தேங்கியுள்ளதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. செண்பகராமன்புதூா், தோவாளை, ஆரல்வாய்மொழி பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.